ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோ ரெம்பாவாய்.
பாடியவர் – பவ்யா ஹரி
விளக்கம்:
நந்தகோபன் வீட்டிற்கு வந்த பெண்கள், உள்ளே அனுமதிக்கப் பட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. உள்ளே வந்து, நந்தகோபனையும் யசோதை பிராட்டியையும் பலராமனையும் கண்ணனையும் எழுப்புகிறார்கள். “சோறும் நீரும் ஆடையும் எங்களுக்கு வழங்குகிற நந்தகோபனே, எழுந்திருக்க வேணும். பெண்களுக்கெல்லாம் கொழுந்து போன்றவளே, ஆயர் குலத்தின் விளக்கானவளே, எம்பெருமாட்டி யசோதையே, உணர்ந்தெழுந்திருக்க வேணும். வாமனனாகத் தோன்றித் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகை அளந்த தேவாதி தேவனே, கண்ணா, எழுந்திருக்க வேணும். ஆணிப் பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த செல்வனே, பலராமனே, உன் தம்பியும் நீயும் எழுந்திருக்க வேணும்’ என்று வேண்டுகிறார்கள்.
பாசுரச் சிறப்பு:
கீழ்ப் பாசுரம் போன்று, மூத்தோரின் துணைகொண்டு ஆண்டவனை அணுகும் முறையை வலியுறுத்துகிற பாசுரம். நந்தகோபனையும் யசோதையையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை அணுகுகிறார்கள். பலராமன் சகோதரன் என்பதால், தம்பியை எழுப்பும்படி வேண்டுகிறார்கள். “கொழுந்து’ என்னும் சொல்லாட்சி நோக்கத்தக்கது. செடிக்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், அந்த பாதிப்பில், துளிர்ப் பகுதியானகொழுந்துதான் முதலில் வாடும். அவ்வாறே, ஆயர் குலத்திற்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், முதலில் யசோதை பிராட்டி வாடுவாள். இராமாவதாரத்தில் இலக்குவனாக அவதரித்த ஆதிசேஷன், கிருஷ்ணாவதாரத்தில் பலராமன் ஆனான். எம்பெருமானோடு கூடவே இருந்து தொண்டு செய்யும் பேறு கிட்டியதால், “செல்வன்’ஆனான். பணம் அன்று, கைங்கரியமே செல்வம் ஆகும். சுவாமிக்கு ஆதிசேஷன் படுக்கை ஆவான். படுக்கை மீது ஒருவர் உறங்கக்கூடும். ஆனால் படுக்கையே உறங்கலாமா? என்னும் ஆதங்கம் தொனிக்கும் பாசுரம்.
அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்
பாடியவர் – மயிலை சற்குருநாதன்
பாடியவர் – பொன் முத்துக்குமரன்
விளக்கம்:
நோன்பியற்றும் பெண்கள், பேரின்ப நிலை தருகிற இறைவனைப் போற்றித் துதிப்போம் என்றுரைக்கும் பாடல். “திருமாலிடத்து, பிரம்மாவினிடத்து, தேவர்களிடத்து என்று யாரிடமும் இதுவரை காட்டாத அன்பினை நம்மிடம் காட்டி, நமக்குப் பேரின்பம் தருகிற வகையில், நம்முடைய இல்லங்களுக்கே எழுந்தருளி, நம்முடைய குற்றங்களையும் வினைத் துன்பங்களையும் போக்கி, தன்னுடைய தாமரைத் திருவடிகளை நமக்காகத் தருகின்ற வீரனை, அருள் பார்வை பார்க்கும் இறைவனை, நமக்கு அரும்பெரும் அமுதமாக இருப்பவனை, நம்முடைய பெருமானைப் பாடி, தாமரைகள் செறிந்த இந்தப் புனலில் நீராடுவோமாக’ என்று கூறுகின்றனர்.
பாடல் சிறப்பு:
நோன்பினை நிறைவு செய்யக்கூடிய நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு தொடங்கி, தன்னலம் மெல்ல மெல்ல விலகிப் போக, பொது நலச்செறிவில் இறைவனையே எண்ணித் துதிக்கும் பாடல். செங்கண் அவன் – செம்மையான கண்களைக் கொண்டவன் } திருமால். திசைமுகன் – நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்கள் கொண்ட பிரம்மா. சேவகன் என்னும் சொல்லுக்கு வீரன், காவல் தலைவன் போன்ற பொருள்கள் உண்டு.
“இல்லங்கள் தோறும் எழுந்தருளி’ என்னும் தொடர், சிந்தனைக்குரியது. பூவுலகில், நம்முடைய இல்லங்களுக்குச் சிலாத் திருமேனிகளாக (விக்கிரகங்கள்), திருவுருவப் படங்களாக எழுந்தருள்கிறார் என்பது மேலோட்டமான பொருள். ஒவ்வொரு உயிரும், இறைவனுக்கான வசிப்பிடம். அப்படியாயின், ஒவ்வொரு உயிரும் இறைவனுக்கான இல்லம். இந்த இல்லங்களில், உயிர்களின் சித்தங்களில் எழுந்தருள்வதில் இறைவனுக்கு ஏக மகிழ்ச்சி. பள்ளத்தை நிரப்பினால்தான், கட்டடம் எழுப்பக்கூடும். ஆகவே, நம்முடைய குற்றங்களைக் களைந்து பின்னர் அருள்கிறான். பாற்கடல் அமுதம் பேரின்பம் பயக்காது; இறைவனாரின் அருள் பேரின்பம் தரும் என்று விவரிக்கும் வகையில், பேரின்பம் சுரக்கும் பாடல்.
-டாக்டர் சுதா சேஷய்யன்