மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 6)




 

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்:

இந்தப் பாசுரத்திலிருந்து இனி வரும் பத்துப் பாசுரங்கள், முன்னர் எழும்பிவந்த பெண்கள், உள்ளே உறங்கும் பிற பெண்களை எழுப்புவதாக அமைந்த துயிலெடைப் பாசுரங்களாகும். 

“பறவைகள் ஒலியெழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில் கருடன் சந்நிதிக்கு அருகே நிற்கும் கோயில் துறையார், சங்கநாதம் எழுப்புகின்றனர். பெண் வடிவில் வந்த பேயளான பூதகியின் பாலருந்தி உயிரை உண்டவனும், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்தவனும், பாற்கடலில் ஆதிசேஷன் மீது துயில் கொள்பவனும், பிரபஞ்சத்தின் முழு முதல் ஆதிகாரணம் ஆனவனுமானகண்ணனைத் தங்களின் உள்ளத்தில் கொலு வைத்திருக்கும் முனிவர்களும் யோகிகளும், மெல்லத் துயிலெழுந்து அவன் திருநாமத்தைக் கூறுகின்றனர். இத்தனை ஒலிகளும் உன் செவியில் புக, கண்ணனை நினைந்து எழுந்திரு சின்னஞ் சிறியவளே’ என்றழைக்கின்றனர். 

பாசுரச் சிறப்பு:

உள்ளத்திலிருக்கும் எம்பெருமானுக்கு எவ்விதத் துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுவது, அவர்கள் அன்பின் ஆழம் எனலாம். துயிலெடைப் பாசுரங்கள் ஸ்வாபதேசம் கூறுகிற வழக்கம் உண்டு. அதாவது, மேலோட்டமாகக் காண்கையில், ஏதோவொரு பெண்ணை எழுப்புவதுபோல் தோன்றினாலும், உள்ளுறையாகத் தன்னைத் தவிர பிற ஆழ்வார்கள் (மதுரகவியார் நம்மாழ்வாரில் அடக்கம்) பதின்மரை ஆண்டாள் போற்றுவதாக ஐதீகம். இம்முறைப்படி, தன்னுடைய திருத்தந்தையாரான பெரியாழ்வாரை இப்பாசுரத்தில் ஆண்டாள் குறிப்பதாகக் கணக்கு. 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ?

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்! 

பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் – மயிலை சற்குருநாதன்

பாடியவர் – சுந்தர் ஓதுவார்

விளக்கம்:

முந்தைய நாள், இப்பெண்களெல்லாம் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருந்தபோது, “நாளை நான் விரைவாக எழுந்துவந்து உங்களை எழுப்புகிறேன்’ என்று கூறியவள் உள்ளே உறங்குகிறாள். “மானே, நேற்று நீ சொன்ன சொல் எங்கே போனது? உனக்கு இன்னமும் விடியவில்லையோ? விண்ணவர், மண்ணவர், பிற உலகினர் என்று எவராலும் அறிய முடியாதவனும், வலிய வந்து நம்மை ஆட்கொண்டு அருளுபவனுமான இறைவனுடைய அழகான வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக்கொண்டு வந்துள்ளோம். எங்களோடு பாட வாயைத் திறக்கமாட்டாயா? ஊன் உருகமாட்டாயா? இவ்வாறு இருப்பது உனக்கே பொருந்தும். எங்களுக்காக நம் தலைவனைப் பாடு’ என்று வெளியில் நிற்கும் பெண்கள் அழைக்கிறார்கள். 

பாடல் சிறப்பு:

இதுவும் இதற்கு முந்தைய பாடலும், சொல்லில் பெருமை காட்டுவதைக் காட்டிலும், செயலில் திட்பம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிற பாடல்கள். அகத்திலுள்ள “காளி’ என்னும் காற்று சக்தி இப்பாடலால் எழுப்பப்படுகிறது.

-டாக்டர் சுதா சேஷய்யன் 







நன்றி Hindu

(Visited 10061 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =