ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன்
பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்:
பாயிரத்தின் நிறைவுப் பாசுரமான இதனில், முறையான விரத நெறிகளும் அவற்றின் முழுமையான பயன்களும் காட்டப் பெறுகின்றன. நோன்புக்கு ஆயத்தமான பெண்கள், தங்களின் உறுதிப்பாட்டை உரைக்கிறார்கள். “மாயச் செயல்களைச் செய்யக்கூடியவனும், வடமதுரையில் அவதரித்தவனும், தூய்மையும் ஆழமும் கொண்ட யமுனை ஆற்றின் கரைக்குச் சொந்தக்காரனும், ஆயர் குலத்திற்கே ஒளிகொடுக்கும் படியாகத் தோன்றியிருப்பவனும், மானுட குலத்தில் பிறப்பெடுத்துத் தாயான தேவகிப் பிராட்டியின் திருவயிற்றுக்குப் பெருமை சேர்த்தவனுமான கண்ணனைப் போற்றுகிறோம். தூய்மையாக வந்து, மனத்தால் எண்ணி, வாயினால் துதிக்கிறோம். இதனால், நாங்கள் இதுவரை செய்த பாவங்களும், எங்களை அறியாமல் இனிமேல் செய்யக்கூடிய பாவங்களும், நெருப்பினில் இட்ட தூசிபோல் அழிந்துபோகும்’ என்று தாங்கள் பின்பற்றுகிற வழிமுறையை விவரிக்கிறார்கள்.
பாசுரச் சிறப்பு:
மனம் (மனத்தினால் சிந்திக்க), வாக்கு (வாயினால் பாடி), காயம் (தூயோமாய் வந்து) ஆகிய மூன்றும் (திரிகரண சுத்தி) தூய்மையோடு ஈடுபடுவதே கடவுள் வழிபாடு என்பதை விளக்கும் பாசுரம். கண்ணனும் கோபிகைகளும் தொட்டு விளையாடியதால், யமுனை புனிதம் பெற்றது. “தூயப் பெருநீர்’ } குழந்தைக் கண்ணனைக் கூடையிலிட்டு வசுதேவர் தூக்கிச் சென்றபோது, யமுனையாள் உயரே உயரே பொங்கினாளாம். குழந்தைக்குத் தீங்கு வரக்கூடாது என்று கூடையை மேலும் மேலும் வசுதேவர் தூக்க, ஒரு கணம் யமுனை நீர் கண்ணன் திருவடியைத் தொட்டுவிட, அதன் பின்னர் அப்படியே குறுகினாளாம். திருவடியைத் தொடவே அவள் உயர்ந்தாள் என்பதை வசுதேவர் உணர்ந்தார்.
அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 5
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்!
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர் – மயிலை சற்குருநாதன்
பாடியவர் – கரூர் சுவாமிநாதன்
விளக்கம்:
புறத்தே நிற்பவர்கள், “திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடியும் காணமுடியாத மலையாக நின்ற இறைவனை, நான் அறிவேன் என்று புரட்டாகப் பேசியவளே, பாலும் தேனுமாக வாய்ச் சொல் ஆடுபவளே, கதவைத் திற! மண்ணுலகத்தவர், விண்ணுலகத்தவர் இடைப்பட்ட உலகங்கள் இருக்குமெனில் அவ்வுலகத்தவர் யாவரின் அறிவுக்கும் அப்பாற்பட்டவனான இறைவன் கொண்ட கோலத்தையும், எளியவர்களான நம்மை ஆட்கொண்டு பெருமைப்படுத்துகிற அவனுடைய சீலத்தையும் பாடி, சிவனே சிவனே என்று நாங்கள் கூவுகிறோம்; அந்த ஒலியும் கேட்காமல் உறங்குகிறாயோ?’ என்று உள்ளே உறங்குபவளை எழுப்புகிறார்கள்.
பாடல் சிறப்பு:
மாலறியா நான்முகனும் காணா – அடிமுடி தேடிய நிகழ்வைச் சுட்டும் வரி. செல்வச் செருக்கும் கல்விச் செருக்கும் “யான், எனது’ என்னும் ஆணவச் செருக்களாகும். இந்த இரண்டும் இருந்தால், இறைவனைக் காண முடியாது. இதையே செல்வக் கடவுளான திருமாலும், கல்விக் கடவுளான பிரம்மாவும் நாடகம் நடத்திக் காட்டினார்கள். அகத்திலுள்ள “கலவிகரணி’ என்னும் ஆகாயரூப சக்தி எழுப்பப்படுகிறது.
-டாக்டர் சுதா சேஷய்யன்