குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள்




2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார்.

இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 

இதையும் படிக்கலாமே.. குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள்

இங்கு 12. 04. 2022 வரை சஞ்சரித்துவிட்டு 13. 04. 2022 அன்று பிற்பகல் 03.48 (ஐஎஸ்டி) மணி அளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

கடக லக்னத்திற்கு லக்னாதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். இதனால் லக்னாதிபதி உயர்ந்த ஸ்தான பலத்தைப் பெறுகிறார் என்று கூறவேண்டும். 

லக்னாதிபதி பலம் பெற்றிருப்பதால் மற்ற கிரகங்களுக்கு அமைகின்ற யோகங்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திர தானங்களில் (1, 4, 7, 10) சுபக் கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். 

“”சந்திரமா மன5ஸோ ஜாத” அதாவது தேவர்கள் முதலான அனைவருக்கும் மனமாக இருப்பவர் என்று வேதம் உரைக்கிறது. அதோடு அவரே தனு (உடல்) காரகருமாகிறார். அதனால் சந்திர பகவான் நம் மனித உடலையும், மனதையும் ஆட்டுவிப்பவர் என்றால் மிகையாகாது. 

நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். சிவபெருமானின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக்கண் செவ்வாய் பகவான் ஆவதால், எந்த ஒரு ஜாதகத்திலும் இம்மூவரின் இணைவு “திரிநேத்ர யோகம்’ என்றழைக்கப்படுகிறது.

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் (கடக லக்னத்திற்கு யோக காரகர் என்கிற அந்தஸ்தில் இருப்பவர்) சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். அதோடு சுக ஸ்தானத்திலமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிம்மாசன யோகமாகும்! இதனால் சந்தான (குழந்தைகள்) அபிவிருத்தி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், தன தானிய லாபமும், அனைத்துச் செயல்களும் விரைவாக நிறைவேறுதல் ஆகியவை உண்டாகும். 

பத்தாமதிபதி, ஒன்பதாமதிபதியின் சாரத்திலமர்வதும் தர்மகர்மாதிபதி யோகத்தின் சாயலையும் கொடுக்கிறது. வம்பு வழக்குகளிலும் எதிர்பாராத வெற்றியுண்டாகும். மனித நேயத்துடன் சமுதாயத் தொண்டுகள் செய்து, பெயர் புகழ் அடையும் யோகமுண்டாகும்!  மேலும் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் துணிவும் ஏற்படும் என்றால் மிகையாகாது. 

ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை அயன, சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் (தன காரகர் தன ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு),  ஒன்பதாம் பார்வை கல்வி, சுக, வாகன, தாய் ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், புத பகவானின் மீதும் படிகிறது. 

பாக்கியாதிபதி, தர்மகர்மாதிபதியின் சாரத்தில் அமர்ந்து கர்மாதிபதியைப் பார்வை செய்வதால், தர்ம கர்மாதிபதி யோகத்தின் சாயலையும் காணமுடிகிறது. குரு பகவான் தன காரகராகி, புதையல்ஸ்தானத்தில் (பாக்கிய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம்) அமர்ந்திருப்பதால், திடீர் அதிர்ஷ்ட யோகங்கள் உண்டாகும். குரு பகவான் தன்னம்பிக்கைக்கு ஆதாரம் கொடுப்பவர். வருமானம் ஊற்றைப்போல் பெருகிக் கொண்டிருக்கும். சொந்த வீடு, நிலம், வாகனம் இவையெல்லாம் கஷ்டப்படாமல் கிடைத்துவிடும். 

குடும்பத்தைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் குடும்பம் நன்றாகவே இயங்கி வரும். வெளி விவகாரங்களில் இயற்கையிலேயே நாட்டம் உண்டாகி, சமூக சேவையில் ஈடுபட்டு புகழ், கெளரவம், அந்தஸ்து ஆகியவைகளைப் பெறுவார்கள். மற்றவர்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதில் முன்னிற்பார்கள். அரசு ஆதரவைப் பெற்று பெரிய பதவிகளில் அமர்வார்கள். குலப் பெருமையைப் பேணிக் காப்பாற்றுவார்கள்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். சூரிய பகவான் பலம் பெற்றிருப்பதால்  மதிப்பு மிக்க அதிகாரம் செய்யும் பதவிகள் தேடி வரும். சரியான நேரத்தில் உணவு உண்ணும் பாக்கியம் உண்டு. முதல் தர அரசுக் கிரகமாவதால் அரசு சம்பந்தமான விஷயங்களில் அதீத ஈடுபாடு உண்டாகும். அறிவு, ஆற்றல், திறமை, துணிவு ஆகியவை இயல்பாகவே அமையும். 

செல்வம், செல்வாக்கு இரண்டும் நல்லபடியாக உயரும். ஆரோக்கியத்திற்கு சூரிய பகவானே காரணமாவதால் உடலாரோக்கியம் மேன்மையாகவே அமைந்துவிடும். பயணம் செய்வதில் இயற்கையிலேயே ஆர்வம் உண்டு. பல நாடுகளுக்குச் சென்று வரும் பாக்கியமும் அமையும். “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்கிற உயர்வான எண்ணம் கொண்டவராவார் என்றால் மிகையாகாது! 

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன, சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான புத பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.

புத பகவான் சுபமாக இருப்பதால் புத்திசாலித்தனம், நற்குணம், மகிழ்ச்சிகரமான வாழ்வு, செல்வம் இவைகள் அனைத்தும் நல்லபடியாக அமையும்.

புத பலத்தால் எழுத்தாற்றல், கலைகளில் ஆர்வம், நல்லொழுக்கம், நற்செயல்களால் புகழ், நவீனமான இல்லத்தில் வசித்தல், ஆடம்பரமான ஆடை ஆபரணங்களை அணிதல், தான தர்மம், வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் யோகம் ஆகியவை உண்டாகும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்குமதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக் பலம் பெற்றும், பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான சச மஹா யோகத்தையும் பெற்றிருப்பது பலமான அமைப்பாகும். இதனால் அரசாங்கத்தால் நன்மை, அறிவாற்றல், பல கலைகளை அறியும் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றல், இறையுணர்வு, தெய்வத் தொண்டு ஆகியவையும் அமையும். அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையும், குறிப்பாக தனக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க நேரத்தில் உதவியும், தகுந்த மரியாதையும் கொடுக்கும் இயல்பைப் பெற்றிருப்பார்கள்.

சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் நீச்சம் அடைகிறார். 

கடக லக்னத்திற்கு சுக்கிர பகவான் நான்காம் வீட்டிற்கதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷமும், பதினொன்றாம் வீட்டிற்கதிபதியாக வருவதால் பாதகாராதிபதியுமாகிறார். 

அவர் பலம் குறைந்திருப்பது சுக்கிர பகவான் சம்பந்தப்பட்ட இனங்களிலிருந்து நன்மையே உண்டாகும். களத்திர காரகராக கருதப்பட்டாலும் அவர் “வாகன காரகர்’ என்பதால் நாம் அன்றாடம் பயணப்படுவதால், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத போக்குவரத்துத் துறை அவரின் அதிகாரத்தில் உள்ளது. 

கால்நடைகளாலும் வருமானத்தைக் கொடுப்பார். சுக்கிர பகவானின் நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமான பதிமூன்றரை நாட்கள் கர்போட்டம காலமாகும். 

இந்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்தால், அந்த ஆண்டின் பருவத்தில் நல்ல மழை பெய்து சுபிட்சமுண்டாகும். அதனால் சுக்கிர பகவானை “”மழைக் கோள்” என்பார்கள். ராகு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகு பகவான் 3, 6, 11}ஆம் இடங்களில் சஞ்சரித்தால் சிறப்புண்டாகும் என்பதை அனைவரும் அறிந்ததே! அதனால் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உச்சம் பெற்றுள்ள சந்திர பகவானுடன் இணைந்திருப்பதால், பலமான அஷ்ட மஹா நாக யோகத்தைப் பெறுகிறார். 

கேது பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
குரு பகவான் மஞ்சள் நிறமான ஒளியைப் பிரதிபலிக்கிறார். இதற்கு “”மீதேன்” என்று பெயர்! இது சூரிய ஒளியிலுள்ள நீலக்கதிருடன் கூடி ஐக்கியப்பட்டு, உலகில் ஜீவராசிகள் கருத்தரிக்கச் செய்கிறது. ஆகவேதான் குரு பகவானை “”புத்திரகாரகர்” என்று பெயர் சூட்டி அழைக்கிறோம். 

பொதுவாக, கோசார சஞ்சாரத்தில் கிரகங்களின் காரக பலன்களைத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஜோதிட விதி; ஆதிபத்ய பலன்களை அல்ல என்றும் புரிந்துகொள்ளவேண்டும்! 

சுப ஸ்தானங்களான நான்கு, பத்தை ஏன் குரு பகவானுக்கு கொடுக்கவில்லை…? என்று பார்த்தால், அவைகள் “கேந்திர ஸ்தானங்கள்’ என்பதால் என்று இருக்கலாம். மற்றபடி குரு பகவான் நான்கு, பத்தாமிடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நன்மைகள் நடக்கின்றது என்பதும் அனுபவ உண்மை. 

“”பத்தில் குரு பதவியைப் பறிப்பார்” என்பதும் பெரும்பாலானவர்களுக்கு ஒத்து வருவதில்லை! மேலும் மற்ற கிரகங்கள் அதிசார கதியிலோ (முன் நோக்கிப் பயணப்படுதல்), அதி வக்கிர கதியிலோ (பின்னோக்கிப் பயணப்படுதல்) சஞ்சரித்தால் தாங்கள் சஞ்சரிக்கும் ராசிக்கு ஏற்ற பலன்களை வழங்குவார்கள்! 

அதேநேரம் இத்தகைய சஞ்சாரங்களில் குரு பகவான் தான் இத்தகைய சஞ்சாரத்திற்கு முன் சஞ்சாரம் செய்த ராசிக்கு ஏற்ற பலன்களையே இந்த அதிசார, அதி வக்கிர காலங்களிலும் வழங்குவார். 

இத்தகைய தனிச் சிறப்பைப் பெற்றிருக்கும் குரு பகவானின் கும்ப ராசி சஞ்சார பலன்களைத் தற்சமயம் காண்போம்.  இவ்வாண்டு, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி நவ.13}ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது. நாம், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி பலன்களை அளித்துள்ளோம். தினமணி வாசகர்கள் அனைவருக்கும் இந்த குரு பெயர்ச்சி நற்பலன்களை வழங்க, குரு பகவானை பிரார்த்திக்கிறோம்!







நன்றி Hindu

(Visited 10033 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =