பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும்.
ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோம்.
முதலில் பெரிய பெரிய நோய்களை விட்டுத் தள்ளுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை அது சொல்லும் அறிகுறிகளை காது கொடுத்துக் கேளுங்கள். நாம் உண்ணும் உணவில் போதுமான சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அது குறையும் போது உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காமல் போகும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்.
குறிப்பாக, உடலில் விட்டமின் டி சத்து குறைவதைப் பற்றி இங்கேப் பார்க்கலாம். இருப்பதிலேயே இலவசமாகக் கிடைக்கும் சத்து என்றால் அது விட்டமின் டி தான். நாள்தோறும் காலையில் சூரிய வெளிச்சத்தில் வந்து சிறிது நேரம் நின்றாலே போதுமானது. உடல் தனக்குத் தேவையான விட்டமின் டி சத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆனால், தற்போது மாறி வரும் சூழ்நிலையில், காலையில் கண் விழிப்பதே அபூர்வமாக மாறிவிட்டது. பிறகு எப்படி காலையில் சூரியனை தரிசிப்பது என்கிறீர்களா? அங்கு தான் தொடங்கியது சிக்கலே.
ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்றவற்றால், சிறியவர்கள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பும் இல்லை. பிறகெப்படி கிடைக்கும் விட்டமின்படி.
அது குறையத்தான் செய்யும். அதற்கான அறிகுறிகளைக் கொடுக்கத்தான் செய்யும். அதையாவது நாம் புரிந்து கொண்டு, உடனடியாக உடலுக்கு விட்டமின் டி கிடைக்கத் தேவையானவற்றை செய்ய வேண்டும்.
விட்டமின் டி என்ன செய்கிறது?
உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள விட்டமின் டி உதவுகிறது. இதுதான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் வந்தாலும் அதனை குணப்படுத்தவும், உடலில் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
விட்டமின் டி குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், அது குறிப்பாக இரண்டுதான் என்கிறார்கள். எந்த சத்துக் குறைந்தாலும் ஏற்படுவதுதான் இது. உடல் சோர்வு மற்றும் உடல் அசதி. இதனால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. தசைகளில் ஏற்படும் சோர்வு, நடக்க முடியாமல் போவது, படிகளில் ஏற முடியாமல் தவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.
விட்டமின் டி குறையும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் மிருதுவாக மாறுகின்றன. பற்களில் ரத்தக் கசிவு போன்றவையும் கூட இதனால் ஏற்படலாம்.
ரத்தப் பரிசோதனை மூலமாக உடலில் விட்டமின் டி குறைபாட்டைக் கண்டறியலாம். விட்டமின் டி குறைந்தாலும் குறையாவிட்டாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், வெளியில் செல்ல தேவையே இல்லாதவர்கள், தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதை வீணாக்குவானேன்.