ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம்




மேஷ ராசி (அசுவினி, பரணி, கார்த்திகை  முதல் பாதம் முடிய)

ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், தினமணி மேஷ ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார்.

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த பயங்கள் அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்கும். புத்துணர்ச்சியுடன்  காரியமாற்றத் தொடங்குவீர்கள். செய்தொழிலை புதிய இடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். பரந்த மனதுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். 

இதனால் தன்னம்பிக்கையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள். உற்றார் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். 
தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் அமையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். பயணங்கள் மூலம் முன்னேற்றகரமான வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். 
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று அவர்கள் உதவியுடன் செயற்கரிய விஷயங்களையும் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடமும் நிதானமாகப் பழகுவீர்கள். 

பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய நண்பர்களைக் கண்டு மகிழ்வீர்கள். 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆராய்ச்சி, தத்துவ விஷயங்களில் தேடல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறைந்துவிடும். உடன் பிறந்தோரின் தேவைகளை அவர்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்வீர்கள். 

வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலர் அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். அனைத்துச் செயல்களையும் நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். 
நீண்ட நாள்களாக சந்திக்க விரும்பிய நண்பர்களைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து, கெüரவம் உயரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் பணவரவுக்குத் தடைகள் இராது. அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சில நேரங்களில் சக ஊழியர்களால் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பெருகும். போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

விவசாயிகள் கால்நடைகளின் மூலம் விரும்பிய பலனை அடைவீர்கள். நீர்வரத்து நன்றாக இருக்கும். தகுந்த நேரத்தில் விதைத்து, மகசூல் பெருகி, சந்தையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கட்சி மேலிடத்தில் ஆதரவு பெருகும். எதிரிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். 

கலைத்துறையினருக்கு அதிகமான முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருதுகளும் பாராட்டுகளும் பெற கடினமாக உழைப்பீர்கள். வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தும் யோகம் உண்டு. 

பெண்மணிகள் முக்கியமான முடிவுகளை நன்கு யோசித்து எடுக்கவும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் இல்லத் திருமண விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். மாணவமணிகளுக்கு ஆசிரியர், பெற்றோர் ஆதரவினால் கோரிக்கைகள் நிறைவேறும். சுறுசுறுப்பாக விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகினால் நன்மை அடைவீர்கள். 

பரிகாரம்:  துர்க்கையை வழிபட்டு வரவும்.
 







நன்றி Hindu

(Visited 10081 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =