இந்த பிலவ வருஷம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மாதம் 3-ஆம் தேதி (17.03.2022) சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி திதி, வியாழக்கிழமை, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், சூல நாமயோகம் பத்திரை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி ஒன்றரை நாழிகைக்குள் காலை 06.37 மணி அளவில் குரு பகவானின் ஹோரையில் ராகு-கேது பகவான்கள் முறையே ரிஷப, விருச்சிக ராசிகளிலிருந்து மேஷம், துலாம் ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு பகவான், கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் 11.07.2022 வரை சஞ்சரித்துவிட்டு, 12.07.2022 அன்று மாலை 5.30 மணி அளவில் பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார்.
06.02.2023 வரை பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்து விட்டு, 07.02.2023 அன்று விடியற்காலை 12.45 மணி அளவில் அசுவினி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார்.
28.11.2023 வரை அசுவினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, மேஷ ராசியை விட்டு மீன ராசிக்கு 29.11.2023 அன்று விடியற்காலை 02.50 மணிக்கு ராகு-கேது பகவான்கள் முறையே மேஷம், துலாம் ராசிகளை விட்டு முறையே மீனம், கன்னி ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கேது பகவான் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார்.
இந்த ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் மேற்கூறிய நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
ராகு, கேது பெயர்ச்சி காலம் சராசரியாக 18 மாதங்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. ஒரு பாத சஞ்சாரத்திற்கு சராசரியாக இரண்டு மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் ஒன்பது பாதங்களை முழுமையாக கடக்க 18 மாதங்கள் (2 * 9 = 18 மாதங்கள்) ஆகும்.
இதில் சில நேரங்களில் ராகு, கேது பகவான்கள் ஒரே நட்சத்திரத்தில் ஸ்தம்பித்து நிற்பார்கள்.
இதனால் கார்த்திகை ஒன்றாம் பாதத்தைக் கடக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும், மொத்த ராசியை 18 மாதங்கள் 10 நாள்களில் கடந்து விடுகிறார்கள்.
ராகு, கேது பெயர்ச்சி சக்கரத்தில் மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீடு ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதி குரு பகவானாவார்.
எனவே செய்யும் தொழிலில் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருவார்கள். தாங்கள் முன்னேறுவதில் அதிக அக்கறை காட்டி, எப்படி நடந்துகொண்டால் முன்னேற முடியும் என்ற நுணுக்கத்தை இவர்கள் நன்கு உணர்ந்தவர்களாவார்கள்.
மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையுடன் நடந்து கொண்டால், எதிர் பாகத்திலும் இவர்களுக்கு தக்க மரியாதை கிடைக்கும்.
குரு பகவான் சாத்வீக குணமுடையவராதலால், இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்கள் படித்த படிப்பு குறைவாக இருப்பினும், எப்படியாவது உயர்ந்த பதவியைப் பிடித்து விடுவார்கள். அதேநேரம் ஜீவனாதிபதியாகிய குரு பகவான் 1, 4, 7, 10 முதலிய கேந்திர வீடுகளில் நின்றால் இவர்களது வேலை பிறர் குற்றம் கண்டுபிடிப்பதாக இருக்கும். இதற்குக் காரணம் குரு பகவானுக்கு ஏற்பட்டிருக்கும் கேந்திராதிபத்ய தோஷமாகும். அதோடு இவர்களை எப்படியும் வீழ்த்தி விட இவர்களை அறியாமலேயே பலர் முயன்று வருவார்கள்.
குரு பகவான் பத்தாம் வீட்டில் ஆட்சியாக நின்று விடினும், உடலில் சோம்பல் மிகுந்து விடுவதால், இவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் வீணாக தங்களைப் பற்றியே தம்பட்டம் அடித்துக் கொள்வதும் இவர்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். அதோடு குரு பகவான் கேந்திர வீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கு மேற்கூறிய குறைகளோடு, இவர்களை நம்பி எந்த வேலையையும் யாரும் ஒப்படைக்க முடியாது என்பதும் மற்றொரு காரணமாகும்.
லக்னாதிபதியான குரு பகவானே மீன லக்னகாரர்களுக்கு ஜீவனாதிபதியாவதால் மேற்குறிப்பிட்ட கேந்திர வீடுகளைத் தவிர்த்து வேறு எங்கிருந்தாலும் உத்தியோகத்தில் சிறப்பைப் பெறுவார்கள்.
குரு பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று விடுகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீது படிகிறது.
சுப நிகழ்ச்சிகள் நடக்கும்: இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள், வீடு வாங்க, வீடு கட்ட, நிலம் வாங்க, வாகனம் வாங்க, பொன், வெள்ளி ஆபரணங்கள் வாங்க, என்பதுடன் ஓர் அரிய சந்தர்ப்பத்தில் தங்கள் அறிவைப் பயன்படுத்தி செய்யும் காரியம் பிற்காலத்தில் இவர்களது வாழ்க்கை சிறப்புற அமைய வழிவகுக்கும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சந்திர (கஜகேசரி யோகம்) பகவானின் மீதும் படிகிறது. கஜகேசரி யோகத்தால் பெயர், புகழ், செல்வாக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு ஆகியவை உண்டாகும்.
எதிரிகள் விலகுவார்கள்:
அரிய பெரிய சாதனைகளைச் செய்து முடிக்கும் ஆற்றலும், பொன் பொருள் சேர்க்கை, ஸ்திர சொத்துக்கள் சேர்க்கை ஆகியவையும் அமையும். குருபகவானால் ஏற்படக்கூடிய யோகங்களில் முதன்மையானது கஜ (யானை) கேசரி (சிங்கம்) யோகமாகும். நூறு யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் போல் என்பது பொருள். நேர்முக, மறைமுக எதிரிகள் விலகி ஓடுவதும், புதிய நண்பர்கள் சேருவதும் ஏற்படும்.
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது.
பொதுவாக எட்டாம் வீட்டின் மீது குரு பகவானின் பார்வை பட்டால், திடீரென்று ஏற்படும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமையும், சண்டை சச்சரவு வழக்கு விவகாரங்களில் இருந்து விடுதலை, பிரயாணங்கள் செய்யும் பொழுது ஏற்படும் பிரச்னைகளும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
சில நேரங்களில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற சுக்கிர பகவான் பெண்களின் ஜாதகத்தில் அசுப பலம் பெற்றிருந்தால் வைர நகை ஒத்து வருவதில்லை. 2, 11-ஆம் வீடுகளில் சுக்கிர பகவான் அமர்ந்திருந்தால் நல்ல தரமான வண்டி வாகன யோகம் உண்டாகும். திடீர் தன யோகமும் உண்டு.
ஏழை, வறியவர்களுக்கு திருமணம் செய்ய உதவியும், ஆன்மிக, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிறைய நிதி உதவியும் செய்வார்கள்.
நிஷேப யோகம்:
யோகங்கள் பல இருந்தாலும் அனைவரின் கண்களும் கேட்டமாத்திரத்திலேயே விரிவடைவது நிஷேப யோகம் ஆகும், அதாவது புதையல் யோகமாகும். இந்த நிஷேப யோகத்திற்கு சுக்கிர பகவானே காரணமாகிறார். இவருடன் பூமிகாரகர் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானும் வலுத்திருந்தால் புதையல் யோகம் பூமியிலிருந்து கிடைக்கும். குருபகவான் வலுத்திருந்தால் பங்கு வர்த்தகம், லாட்டரி மூலமும், புத பகவான் வலுத்திருந்தால் தங்கள் எழுத்து அறிவின் மூலமும் புதையல் போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.