புதுவை அரசுப் பணிக்கான தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் புதுச்சேரி, டிச. 28: புதுவை அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தாளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான (பாஜக) க.செல்வகணபதி வெளி யிட்ட அறிக்கை: புதுச்சேரி விவேகானந்தா கல்வி அறக்கட்டளை ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது. அதனடிப்படையில், ஏழை, எளிய மாணவியருக்கு கல்வி சார்ந்த உதவி கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுவை மாநில அரசு இளநிலை எழுத்தர், பண்டகக் காப்பாளர், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு நேரடி எழுத்துத் தேர்வு மூலம் ஆள்களைத் தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு இலவசப் பயிற்சி அளிக்க விவேகானந்தா கல்வி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பணிக்கான தேர்வு எழுதவுள்ள ஏழை, எளிய இளைஞர்கள், பெண்கள் இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுவரையில் 400 -க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். வகுப்புகள் தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் என இரு பிரிவாக நடக்கவுள்ளன. பயிற்சி வகுப்பானது கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் நடத்தப்படும்.
விண்ணப்பங்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இணைய தளத்திலும் அனுப்பலாம். விண்ணப்பிக்கும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.