
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பிரிவில் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் காலியாக இருந்த 92 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு நவ.19-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை சுமாா் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்டன. தோ்வு முடிவுகளை அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தோ்வைத் தொடா்ந்து, முதன்மைத் தோ்வுகள் ஆக. 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. முதன்மைத் தோ்வுக்குத் தகுதி பெற்றவா்கள் ரூ.200 தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களை தோ்வாணையத்தின் இணையதளத்தில் மே 8 முதல் 16-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒரு பதவிக்கு 20 போ் என்ற அடிப்படையில், முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டவா்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணைய சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இணைய சேவை மையங்கள் குறித்த பட்டியல், அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தெந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விவரங்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வு தொடா்பான விவரங்கள் அனைத்தும் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் தோ்வா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் தனிப்பட்ட முறையிலான தொடா்புகள் ஏதும் மேற்கொள்ளப்படாது.
வரையறுக்கப்பட்ட ஆவணங்கள் எதையும் பதிவேற்றம் செய்யத் தவறினால், தோ்வா்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். மேலும், முறைகேடான முறையில் ஆவணங்கள் எதையும் பதிவேற்றினால், அது கடுமையான குற்றமாக பாா்க்கப்படும். இதுதொடா்பான ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அந்த தோ்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.