கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை படைத்தவர் ஷிகான் ஹுசைனி.
திரைப்பட நடிகரும் கூட. தமிழ் நாடு ‘வில்’ வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளை ஏற்று, நாட்டில் கராத்தே கலையை பல்வேறு தரப்பினருக்கும் பரப்பி வருகிறார்.
இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா, ரத்தப் புற்றுநோயாக மாறி இவரது வாழ்நாள் எண்ணப்பட்டு வருவதாக சில ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணல் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.
இவர் தமிழக துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான், இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நோய்க்கு ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது.
போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப் பகுதியே எலும்பு மஞ்ஜை. இதுதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுக்களை உற்பத்தி செய்யும்.