உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்குமா? – ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு




உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலில் தற்போது பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருப்பது உடல் பருமன்தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர்.

அந்த வகையில் நோய்களில் புற்றுநோய் தற்போது அதிகரித்து வரும் நிலையில் நோயின் காரணம் பெரிதாகக் கண்டறியப்படாவிட்டாலும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முறையான சிகிச்சை மேற்கொண்டு மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில், உடற்பயிற்சி செய்வது பெருங்குடல் புற்றுநோய் இறப்புகளை 37 சதவீதம் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கும் குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட புற்றுநோயாகவும் இறப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்பட 6 நாடுகளில் 889 பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளிடம் 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்களுக்கு நீச்சல் முதல் நடனம் வரை ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை, கீமோதெரபி மூலம் முன்னதாக சிகிச்சை பெற்றவர்கள், 3 ஆண்டுகள் உடற்பயிற்சி செய்த பின்னர் அவர்களது உடல் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடற்பயிற்சி செய்தவர்களுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 90 சதவீதம் உயிர் வாழும் வாய்ப்பு இருந்தது. ஆனால் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு 83 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது அவர்களது ஆயுள்காலம் ஓரளவு நீட்டிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து மீளவும் தங்கள் வாழ்நாளை நீட்டிக்கவும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் அவர்களுக்கு உதவும் என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுபற்றிய தொடர்ச்சியான ஆய்வுகளும் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =