அவதாரம்! குறுந்தொடர் 4




காஞ்சியிலிருந்து திருவரங்கத்திற்குச் செல்லும் போதே ஆளவந்தார் பரமபதம் எய்தினார் என்ற செய்தி எட்டியது. யதி சமஸ்காரங்கள் முடிந்து காஞ்சி திரும்பிய பிறகு ஒரு தெளிவற்ற நிலையிலிருந்தார். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீ வைஷ்ணவ உலகின் தலைமைப் பொறுப்பு  ஏற்று வைணவத்தை நிலை நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமக்காகக் காத்து நிற்கிறது என்ற உணர்வு இளையாழ்வாருக்கு ஏற்பட்டது. அதற்கு தம்மைத் தகுதியுடையவராகச் செய்து கொள்வதில் அவர் இறங்கினார். அந்த நினைவு அவரது நெஞ்சில் புயலை எழுப்பியது. குழம்பி நின்ற ராமானுஜர் தெளிவுக்காக இறைவன் கட்டளையை எதிர்நோக்கினார். திருக்கச்சி நம்பியின் உதவியை நாடினார். 

* நானே (அருளாளன் எனப்படும் -திருமாலே) முழு முதற்கடவுள். * ஜீவாத்மாவிலிருந்து  பரமாத்மா வேறுபட்டது. * இறைவனை அடையும் முக்திநெறி முழுச் சரணாகதியே. * இறைவனடி சேர்ந்தார்க்கு மரணத்தைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. * உடல் சாய்ந்த பிறகே மனிதருக்கு முக்தி. * பெரிய நம்பியை ஆசார்யராகப் பின்பற்று! என்னும் ஆறு வார்த்தைகளில் விளக்கமளித்தார் அருளாளன்.

கி.பி. 1039 ஆம் ஆண்டு திருக்கச்சி நம்பியை முதன்மை ஆசார்யராக இருக்கச்செய்து பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று, ஆத்ம யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினார். அதையொட்டி திருக்கச்சி நம்பியைத் தேடி இல்லத்தில் அமுது செய்ய (உணவருந்த) எழுந்தருள வேண்டினார். அவரும் இசைந்தார். மனைவி தஞ்சமாம்பாளிடம் திருக்கச்சி நம்பிக்கு, உணவு தயாரிக்கச் சொல்லி, அவர் உண்டபின் மிச்சமுள்ளதைத் தாம் அருந்தி, தூய்மை பெற விழைந்தார். ஒரு திருமால் அடியாரை உணவருந்தச் செய்து அந்தப் போனகச் சேடம் பெற்று அருள்பெற விழைந்தார் ராமானுஜர்.

குறிப்பிட்டபடி, தஞ்சமாம்பாள உணவு தயாரித்து விட்டு இன்னும் விருந்துண்ண வர வேண்டிய அவரைக் காணவில்லையே என்றாள் கணவரிடம். "எதிர்வந்து கொண்டிருப்பார் நானே நேரில் போய் அழைத்து வருவேன்’ எனக்கூறி திருக்கச்சி நம்பியைத் தேடி கோயிலை வலமாகச் சுற்றிச் சென்றார். குறித்த காலத்தில் ராமானுஜர் இல்லம் செல்ல வேண்டும் என்பதற்காக கைங்கர்யத்தை நடுவில் நிறுத்தி, திருக்கச்சி நம்பியும் வேறொரு வழியாக வலம் வந்து ராமானுஜரின் 
இல்லத்தை அடைந்தார்.

வந்தவர், "அம்மணி அடியேன் இறை சேவையை இடையில் நிறுத்தி வந்தேன்.  விரைந்து பிரசாதம் பரிமாற வேணும்” என்று பணிவுடன் வேண்டினார்.
ராமானுஜரின் மனைவியும், கணவர் வரவுக்குக் காத்திராமல் இடைசுழியில் இலையிட்டு, நம்பிக்கு உணவு பரிமாறி, அவர் சாப்பிட்டதும் விரைந்து, எச்சிலை எடுத்து அகற்றி, சாணம் இட்டு தரை மெழுகி நீராடவும் சென்றாள்.

திருக்கச்சி நம்பியைத் தேடிச் சென்று கோயில் எங்கும் தேடிக் காணாமல் அலைந்து, வீடு திரும்பிய ராமானுஜர் நீராடி நிற்கும் மனைவியைப் பார்த்து  விவரம் வினவினார். தஞ்சமாம்பாளும் நடந்ததைச் சொல்லி மேலே வீட்டைக் கழுவி, புதியது சமைக்க  முற்பட்டாள்.

ராமானுஜருக்குப் ஆற்றொணாச் சீற்றம் அளவு கடந்து வந்தது. ஆளவந்தார் அருள்வேண்டி ஸ்ரீரங்கம் சென்றபோது ஏற்பட்ட ஏமாற்றம், அதைத் தொடர்ந்து அவரது அடியார் சேஷம் பெற ஆசைப்பட்டு அதுவும் கிட்டாத ஏமாற்றம் எல்லாம் சேர்ந்தது. ஆயினும் ஒருவாறு சினத்தை மனத்தில் அடக்கிக்கொண்டு, ""பரம பாகவதரை ஆராதிக்கும் முறை இதுதானா?” என்று மனைவியைக் கேட்டார்.

"நான் தவறு ஏதும் செய்யவில்லையே, சாதிக்குத் தக்க ஆசாரத்தோடு சமூகத்தில் உள்ள நடைமுறைப்படிதான் நடந்து கொண்டேன்” என்று மறுமொழி தந்தாள் மனைவி.   ""பெருமாளிடம் நேரில் வார்த்தையாடும் பாகவத உத்தமர்க்கு சாதி ஏது? சாதிக்கென தனி நீதி ஏது?” என்று கடிந்து கொண்டார். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பாகவத அபசாரத்துக்கு பரிகாரம் செய்ய நம்பியைத்தேடி ஓடினார். நடந்துவிட்ட தவறுக்காக  காலில் விழுந்து மன்னிக்க மன்றாடினார்.

இளையாழ்வாரின் மனோநிலை கண்ட திருக்கச்சிநம்பி அவரைப் பலபடியாக ஆறுதல் கூறித்தேற்றினார். ஆயினும் அவர் மனம் தெளியவில்லை. கி.பி. 1039 இல் இந்நிகழ்ச்சி நடக்கும் போது ராமானு ஜரின் வயது 22 மட்டுமே. 

நல்ல ஆசான்களின் தொடர்பினால் ஸ்ரீ வைஷ்ணவ நூல்களைப் பயின்று பிரசாரப் பணிகளைத் தொடங்கியிருந்த ராமானுஜரின் தனி வாழ்வு மெல்ல மெல்ல ஸ்ரீ வைணவப் பொது வாழ்வாக மலர்ந்து வந்தது. அவரை நாடிப் பலர் கூடினர். அவரது புகழும் ஆத்ம குணச்சிறப்பும் மெல்ல மெல்ல உலகெங்கும் ஒளிரத்துவங்கியது.

ஓர் ஏழை ஸ்ரீ வைணவன்  மிகுந்த களைப்புடன் வந்து, பசிக்கிறது என்று கூறினான். பசியால் துடிக்கும் அவனுக்கு ராமானுஜர் உடனே சோறிடுமாறு தஞ்சமாம்பாளிடம் கூறினார். அவரோ, "இவர்களுக்கெல்லாம் என்ன வேலை, எப்போதும் தொல்லை’ என்கிற பாவனையில் அலட்சியமாக "அடிசில் இன்னும் தயாராகவில்லை” என்றார். "பழைய அமுதாவது இருந்தால் உடனே போடு! " என்றார் ராமானுஜர். அது கூட இல்லை என்று மறுதலித்தார் மனைவி.

அவ்வார்த்தையில் சந்தேகம் கொண்ட ராமானுஜர், மனைவி வேறு வேலைக்குச் செல்ல, தாமே தளிகை சமைக்கும் அறைக்குச் சென்று பார்த்தார். ஒரு பாத்திரத்தில் பழைய அமுது நிறைந்து இருந்தது. அதையெடுத்து ஸ்ரீ வைணவனுக்கு வழங்கிவிட்டு, தஞ்சமாம்பாளிடம் "உன்னிடம் கருணையும் வற்றிவிட்டது.

பொய்யும் புகுந்துவிட்டது’ என்று சொல்லிக் கடிந்துகொண்டார். அந்தச் சொல்லால் கூட அவர் திருந்தவில்லை. உலகு உய்ய வழி காட்டிய உத்தமனின் பாதையில் நடக்கத் தஞ்சமாம்பாள் தயாராகவில்லை. ஆனால் உண்மையை யதார்த்தத்தை உணர்ந்து உலகம் நடந்தது.
– இரா.இரகுநாதன்





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =