மேலே குறிப்பிட்ட ஜாதக அலங்காரத்தில் கும்ப ராசியில் சந்திரனை புதன் பார்வையிட்டால் அந்த ஜாதகன் வேந்தன் ஆவான். குரு பார்த்தால் நிலம் ஆளும் அரசால் அரசர்களுக்கு இணையான போக வாழ்க்கை நடத்துவான். அதுவே செவ்வாய், சூரியனோ, சனியோ, சுக்கிரனோ நோக்கினால் மாற்றான் மனைவி மீது தகாத ஆசை கொள்வான். பாவ காரகம் என்று எடுத்துக் கொண்டால் இது கால புருஷனுக்கு 11வது பாவமாகும். இங்குதான் ஒருவரின் மொத்த சந்தோஷமும் பூர்த்தி செய்யும் இடம். இந்த இடத்தில் பாவிகள் சேர்க்கை, முக்கியமாக ராகு இருப்பது செயலில் தடையை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக தற்போது கோசாரத்தின் ராகு கும்பத்தில் இருக்கிறார்.
இக்காலக்கட்டத்தில் பணம் பொருள் சேர்க்கை இருந்தாலும், ஒரு சில சொத்து பிரச்சனை, திருமணத் தடை, ஏமாற்றங்கள், குடும்ப பிரிவு, அளவுக்கு மீறிய கடன், அரசாங்க வாய்தா, மற்றும் அறுவைச் சிகிச்சை என்று வரக்கூடும். இவை அனைத்தும் பொது பலன்களே, இங்கு மற்ற கிரகங்களையும் பார்த்து தான் முழு பலனைச் சொல்ல முடியும். இந்த நேரத்தில் இவர்கள் புதிய செயல்களை துவங்காமல் இருப்பது நன்று. வெளியூர் பிரயாணம் கிட்டும். சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள், அவருக்குப் பிடித்த மாதிரி நீதி, நியாயம், பொறுமை, உழைப்பு, தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல், ஆன்மிகப் பணி, கொடை என்ற உயரிய பண்புடன் வாழ்ந்தால் ஏழரைச் சனியின் பிடியில் சிக்க மாட்டார்கள். பாவ கிரக சேர்க்கையால் கும்பத்தில் இருக்கும் நீர் அழுக்காகவும் மாறலாம், அவற்றைப் புனித நீராக மாற்றுவது அவரவர் கடமை.
கும்ப லக்ன /ராசிக்காரர்கள் மாசி மகம் அன்று பழம்பெரும் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் குளித்து அங்குள்ள சுவாமிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நன்று. சனிக்கிழமை கிழமைகளில் நீர் மோர், தயிர்ச் சாதம், வெண்பொங்கல் என்று தங்களால் முடிந்ததை தானம் செய்யும்போது ஜாதகருக்கு ஏற்படும் தடைகள் நீக்கப்படும். அதுதவிர தங்களால் இயன்ற அளவு யானை, குரங்கு, மற்றும் காகத்திற்கு உணவு, நீர் அளித்தல் சிறந்த பரிகாரம்.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com